Wednesday, October 2, 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்


 
பல வருடங்கள் கழித்து தமிழில் ஒரு அதிரடி திரில்லர் திரைப்படம் பார்த்த மகிழ்ச்சியில் இருக்கிறேன். மிஷ்க்கின் தன் தகுதியை மீண்டும் உயர்த்திக் கொண்டார். முகமூடியில் படிந்த கரையை முகமூடியோடு தூக்கி எரிந்துவிட்டு ஓநாயாக வேட்டையாடியிருக்கிறார் இப்பொழுது.

சிலருக்கு ட்ரைலரையும் திரைப்படத்தின் பெயரையும் வைத்து கதையை யூகிக்கும் திறன் உண்டு. அப்பேர்ப்பட்டவர்களுக்கும் சவாலான கதை இது. திரைப்படத்தின் பெயர் கதையுடன் எவ்வாறான வடிவங்களிலும் கோனங்களிலும் உறவாடுகிறது என்பதை படம் பார்த்து உணர்ந்துகொள்ளுங்கள்.

மிஷ்க்கினுக்கென்று ஒரு பாணி உண்டு. அது அவர் படங்களை தொடர்ந்து கவனிக்கும் ரசிகர்களுக்குத் தெரியும். உதாரணமாக,
கதை அதிகமாக இருட்டு அல்லது இரவிலேயே பயணிப்பது, கால்களை மட்டுமே அதிகமாக திரையில் உலவ விட்டு கால்களின் வழியே அந்தக் கதாபாத்திரத்தின் உணர்வை, கதையை ரசிகன் உணர்ந்து கொள்ளச் செய்வது, கதாபாத்திரங்கள் சற்று மந்தமாக இருப்பதுபோல் சித்தரிப்பது, வசனங்களை தவிர்த்து உடல்மொழியில் பேசுவது... இப்படியாக பல. அது இப்படத்திலும் உண்டு. ஒரு இயக்குனருக்கு அவ்வாறான அடையாளம் இருப்பது தவறில்லை என்பது என் எண்ணம். மஞ்சள் சேலை ஆட்டம் அழித்தொழிக்கப் பட்டுவிட்டதாக தெரிகிறது.

படம் துவங்கியதிலிருந்து முடிவு வரை... மிஷ்க்கின் பார்வையாளனுக்கு சமூக அவலங்களை முகத்தில் அடித்தார்போல் சொல்லிக் கொண்டே செல்கிறார். அதை உணராத பார்வையாளன் அதற்க்கு உடந்தை என்றே ஆகும்.  உதாரணம்...
1. முதல் காட்சியில் உயிருக்கு போராடும் மனிதனைப் பார்த்து சிலர் நமக்கேன் வம்பு என்று செல்வதும்.. சிலர் வெறுமனே விமர்சித்து செல்வதும்.. சிலர் அலைபேசியை எடுத்து  முகபுத்தகத்திற்க்காக புகைப்படம் எடுத்துக் கொண்டு செல்வதும் போல காட்சியாக்கப்பட்டிருக்கும். அதே சமயம் அவ்வழியே செல்லும் ஒரு நபர் அவனைக் காக்கப் போராடுவதாகவும் காட்சியமைக்கப்பட்டிருக்கும்.
2. தனியார் மருத்துவமனை ஊழியர்கள், சில காவல்துறை அதிகாரிகள், உயிரைக் காப்பாற்றிய்வனையே அவ்வுயிரை எடுக்க்ச் சொல்லி மிரட்டும் உயரதிகாரிகள்.
3. காவல் உயரதிகாரி மிஷ்க்கினுடன் எத்தனை பிணங்கள் வந்தாலும் பரவாயில்லை.. ஆனால் மிஷ்க்கின் உயிரோடு இருக்கக் கூடாது என்று சொல்லும் காட்சி. இப்படியாக சமூக அவலங்களை கதையின் போக்கில் சொல்லிச் செல்கிறார்.

இந்த திரைப்படத்தில் அதிகமான புதுமுகங்கள் வருகின்றன... வாழ்கின்றன. குறிப்பாக ஒரு குழந்தையும்.. சி.பி.சி.ஐ.டி அதிகாரியும். புதுமுகங்கள் படத்திற்க்கு அவசியமான ஒன்று என்றே தோன்றுகிறது.. அதுவும் இப்படத்திற்க்கு கண்டிப்பாக தேவைப் படுவதாகவே தெரிகிறது.படம் முழுவதும் புதிதாக பார்வையாளனுக்குத் தெரியவும், இயக்குனர் தன் போக்கிற்க்கு பார்வையாளனை அழைத்துச் செல்ல வசதியாகவும் அது இருப்பதாகப் படுகிறது. புதுமுகங்கள் என்பதால் சில காட்சிகளில் அற்புதமாகவும்.. சில காட்சிகளில் மிகையாகவோ அல்லது மந்தமாகவோ இருக்கிறார்கள்.

மிஷ்க்கினின் அறிமுகம் அதிரடி. ஆனபோதும்.. அடுத்து வந்த காட்சிதான் என்னை கைத்தட்டி விசிலடிக்க வைத்த காட்சி. அதுவே மிஷ்க்கினின் திரை ஆளுமையை ரசிக்கச் செய்த காட்சி. நடிகர் ஸ்ரீ மிஷ்கினை நோக்கி துப்பாக்கியை நீட்டி.. 3 எண்ணுவதற்க்குள் துப்பாக்கியை கீழே போடு என்று சொல்லிவிட்டு 1 என்பார். அடுத்த வினாடி மிஷ்க்கின் தன் அருகிலிருக்கும் பெண்ணின் நெற்றியில் தன்னுடைய துப்பாக்கியை வைத்து 2 என்று முடிப்பார். உடன் ஸ்ரீ தன் துப்பாக்கியை தரையில் போட்டு மண்டியிடுவார். அற்புதமான காட்சி. விசிலடிக்கவைக்கும் காட்சி. மிஷ்க்கி்னின் கதாபாத்திரத்தை நம் சிந்தைக்குள் இறக்கிவிடும் காட்சி. அங்கிருந்து ஸ்ரீ’யை விட்டு பார்வையாளன் மிஷ்க்கினை தொடர்வது தவிர்கமுடியாதது.

பிறகு மிஷ்க்கின் நம்மை ஒரு இரவெங்கும் பயணிக்கவைப்பதும்.. அவருடன் சில இடங்களில் நாமும் கோபப் படுவதும்.. உணர்ச்சி வசப்படுவதும் தவிர்க்க இயலாதது. மிஷ்க்கின் நடிகனாகவும் மெருகேறியிருக்கிறார் என்றால் மிகையில்லை. கதையில் ஸ்ரீ'யின் மாற்றம் எதிர்பார்த்த ஒன்றே என்றாலும் அந்தக் காட்சியில் எதிர்பார்கவில்லை. அதை நியாயப் படுத்தியதும் ஒத்துக் கொள்வதாகவே இருக்கிறது. ஸ்ரீ'யின் நடிப்பு அருமையாக இருக்கிறது. எங்கும் குறையாகத் தெரியவில்லை.

படத்தை ரசித்து ரசித்துப் பார்த்த பின்பும்.. பரீட்சை எழுதி முடித்து வெளியே வந்தபிறகு.. எழுதியது சரியா என்று புத்தியையும் புத்தகத்தையும் புரட்டிக்கொண்டே இருக்கும் சில மாணவர்கள் போல், படம் பார்த்த பிறகு மிஷ்க்கின் சொல்லவந்ததை நான் முழுவதும் உணர்ந்துவிட்டேனா அல்லது எதாவது சிலவற்றை கவனிக்கத் தவறிவிட்டேனா என்று என்னை நான் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். மீண்டும் ஒருமுறை படம் பார்க்க என்னைத் தூண்டுகிறது என் மனது. உதாரணம்
1. ஒரு வில்லன் 2 காவல் அதிகாரிகளை சுட்டுக் கொள்ளும் போது ஒருவர்.. கர்த்தரே என்றும்.. ஒருவர் முருகா என்றும்.. மூன்றாம் நவரை சுடும்போது அவர் ஐயா என்றும் சொல்வதாக இருக்கும். அது ஒரு காரணமாகவே  வைக்கப் பட்டிருப்பதாகத் தெரிகிறது.
2. கடைசிக் காட்சியில் ஒரே பிரேமில், மிஷ்க்கின் தரையில் கிடக்க.. அவர் தலைக்குமேல் அந்த சிறுமி நிற்க்க... மிஷ்கினிற்க்கு சற்று தள்ளி ஸ்ரீ மண்டியிட்டு நிற்க்க.. அவன் அருகில் அந்த வில்லன் கதாப்பாத்திரம் வீல்சேரில் அமர்ந்திருக்கும் படி இருக்கும். அங்கே மிஷ்க்கின் பலவிடயங்களை சொல்ல நினைப்பதாக தெரிகிறது. ஆனால் என் மரமண்டைக்கு ஏறவில்லை. புரிந்தால் விளக்குங்கள்.
படத்தைப் பற்றி சொல்லியாயிற்று.. ஆனால் இளையராஜா பற்றிச் சொல்லவில்லையென்றால் அது வரலாற்றுப் பிழையாகாதா ?
ராஜா.. ராஜா தான். படத்தில் பாடல்கள் இல்லை. மிஷ்க்கினிற்க்கு இதற்க்காகவே ஒரு பாராட்டு. ஆனால் அது இசை ரசிகர்களை ஒருபோதும் வருத்தமடையச் செய்யாது. காரணம் பிண்ணனி இசை. பட்டையை கிளப்பியிருக்கிறார் ராஜா. கதையும் இசையும்... உடலும் உயிரும் போல இரண்டறக் கலந்திருக்கிறது. படத்தின் மிகப்பெரிய பலம் இசை.

எல்லாம் சரியாய் இருப்பதுபோல் எழுதியிருப்பதால் படத்தில் தவறே இல்லையா.. என்றால், இருக்கிறது.. படத்தில் நிறையவே பிழைகள் தெரிகிறது. அது ஒரு இயக்குனர் அறிந்தோ அறியாமலோ விட்டுச் சென்றிருக்கலாம். ஆனால் குற்றங்களை கூறி என்னாகப் போகிறது ? இம்மாதிரியான நல்ல படங்களை, வேறு கதைக் களங்களை கொண்ட படங்களை ஆதரித்து தமிழ் திரையுலகம் சற்று ஆரோக்கியமான மாற்றுப் பாதையில் பயணிக்க.. ரசிகர்கள் உதவவேண்டாமா ? "சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்" என்றல்லவா படித்திருக்கிறோம். இய்க்குனர்கள் பழக ஆரம்பித்திரிக்கிறார்கள்.. அவர்களை குறைகூறி அவர்களின் முயற்ச்சிகளை முடக்கவேண்டாமே.

முயற்ச்சி திருவினை ஆகும்.... ஆக்குவோம்.

No comments:

Post a Comment